String Hoppers Biryani - இடியாப்ப பிரியாணி

ஸ்ட்ரிங் ஹாப்பர்ஸ் பிரியாணி/ இடியாப்ப பிரியாணி இலங்கையில் பிரபலமான ஓர் உணவாகும். மற்ற பிரியாணிகளைப் போலவே, இதுவும் தனித்துவமானது மற்றும் சுவையானது. ரெசிபி தமிழில்.

4 பேருக்கு போதுமான சுவையான இடியப்ப பிரியாணி 

தேவையான பொருட்கள் 
  • அரிசிமா( வறுத்து அரித்தது) -2 சுண்டு (நிரப்பி)
  • கெட்டியான தேங்காய்ப்பால் - 3/4 தம்ளர் (பாதித்தேங்காய்)
  • இறைச்சி - 250 கிராம் 
  • வினாகிரி - 1மே.க 
  • தக்காளிப்பழம் - 125 கிராம்
  • கரட் - 125கிராம் 
  • லீக்ஸ் - 125கிராம் 
  • உருளைக்கிழங்கு - 250கிராம்  
  • மாஜரின் - 50 கிராம்(2 மே.க நிரப்பி )
  • வெங்காயம் - 100கிராம் 
  • கடுகு - 1சிட்டிகை 
  • பெருஞ்சீரகம் - 1சிட்டிகை  
  • இஞ்சி / உள்ளி - 1 துண்டு / 3 பல்லு 
  • மாஜரின் - 50கிராம் 
  • கறுவாத்தூள் - 1 தே.க (மட்டமாக)
  • மிளகாய்த்தூள் - 1 தே.க (மட்டமாக) 
  • சிறிதாக வெட்டிய கறிவேப்பிலை - 1 தே.க (நிரப்பி)
  • மிளகுத்தூள் - 1 தே.க (நிரப்பி)
  • உப்புத்தூள் - அளவிற்கு

 செய்முறை 

  1. அரிசிமாவை அரித்துப் பாத்திரத்திலிட்டு அளவிற்கு உப்புநீரும் 1 மே.க தேங்காயெண்ணையும் விட்டுக் கலந்து வைத்துக் கொண்டபின்பு நன்றாகப் பொங்கிக் கொதித்த நீரையெடுத்து கேற்றிலின் மூடியைத் திறந்து இரண்டு நிமிடங்கள் வைத்துக் கொண்ட பின்பு கொதிநீரை அளவிற்கு விட்டுக் கையிலொட்டாத மெதுமையான பதத்திற்குக் குழைத்து மெல்லிய இடியப்பங்களாக அவித்தெடுத்துக் கொள்க.(பொங்கிக் கொதித்த நீரை உடனேயே மாவினில் விட்டால் மாவு அதிகமாக அவிந்து கொள்வதுடன் இடியப்பம் பிழிவதற்கு கடினமாக இருக்கும். அத்துடன் இடியப்பம் அதிக மென்மையாக இருக்காது.)
  2.  பின்பு இறைச்சியை துப்பரவாக்கிக் கழுவி பசுந்தையாக இடித்த உள்ளி, இஞ்சி, உப்புத்தூள், மிளகுத்தூள் என்பவற்றையிட்டுக் கலந்து நன்றாகப் பிசைந்து அரை மணி நேரம் வைத்துக் கொள்க.
  3. தக்காளிப்பழத்தைக் கழுவிச் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்க.
  4. மரக்கறி வகைகளைத் துப்பரவாக்கிக் கழுவிச் சிறு சிறு துண்டுகளாக வெட்டித் தனித் தனியாக உப்புப் புரட்டி வைத்துக் கொள்க.
  5. வெங்காயத்தை துப்பரவாக்கிச்   சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்க.
  6. பின்பு தேங்காயெண்ணையைக் கொதிக்கவைத்து உருளைக்கிழங்கைப் போட்டுப் பொரித்தெடுத்துக் கொள்க.
  7. பின்பு வெட்டி வைத்துள்ள லீக்ஸ், கரட், என்பவற்றை நீராவியில் அவித்தெடுத்துக் கொள்க.
  8. அவித்த இடியப்பங்களை ஓர் பெரியதட்டில் ஐதாக அடுக்கி 1/2 தம்ளர் தேங்காய்ப் பாலைப் பரவலாக ஊற்றி இரண்டு முள்ளுக்கரண்டிகளைப் பாவித்து நன்றாகக் கிளறி உதிர்த்திக் கொள்க.
  9. பின்பு தாச்சியில் எண்ணெய் விட்டுக் கொதித்ததும் இறைச்சியையிட்டு மூடி அவிய வைத்து 1/4 தம்ளர் பால்விட்டு நீர் வற்றும்வரை அவித்தெடுத்துக் கறுவாத்தூள், மிளகாய்த்தூள் என்பன கலந்து இறக்கி வைத்துக் கொள்க.
  10. பின்பு பெரிய தாச்சியில் 50கிராம் மாஜரினை இட்டுக் காயவைத்துக் காய்ந்த பின் கடுக்கைப் போட்டு வெடிக்க வைத்து வெங்காயம், உள்ளி, கறிவேப்பிலை என்பவற்றைப் போட்டு வதங்கவிட்டு அரைப்பதமாக வதங்கியபின் தக்காளிப்பழம், நீராவியில் அவித்த மரக்கறிவகை, பொரித்த உருளைக்கிழங்கு, இறைச்சி என்பவற்றையிட்டு வதங்கவிட்டு, வதங்கிய பின் உதிர்த்தி வைத்துள்ள இடியப்பத்தைக் கொட்டி நன்றாகக் கிளறி இறக்கிப் பரிமாறலாம்.
  11. உருளைக்கிழங்கைப் பொறிப்பதற்கு பதிலாக நீராவியில் அவித்தெடுத்தும் பயன்படுத்தலாம்.      
 

       









    

Post a Comment

0 Comments