Rich Cake Recipe - ரிச் கேக்


எங்கள் ரிச் கேக் செய்முறையுடன் சுவையான ரிச் கேக்கை இன்றே தயாரியுங்கள். இது எந்தவொரு நிகழ்விற்கும் ஏற்ற ஓர் கேக் வகையாகும். மேற்கத்திய பழ கேக்கின் இலங்கையின் பதிப்பு இந்த  ரிச் கேக் ஆகும். ரெசிபி தமிழில் இதோ!

 60 துண்டுகள் 

தேவையான பொருட்கள்  

பகுதி - I

  • ரவ்வை - 500 கிராம் 
  • மாஜரின் - 500 கிராம் 
  • சீனி - 1000 கிராம்
  • முட்டை  மஞ்சள்கரு - 25 முட்டையினது 
  • வெண்கரு மட்டும் - 12 முட்டையினது 

பகுதி - II

  • பிளம்ஸ் - 500 கிராம் 
  • கஜீ - 500 கிராம் 
  • (ரெய்சின்) விதையுள்ள முந்திரி வத்தல் - 500 கிராம் 
  • பூசினியல்வா (பக்கின் பிறிசேவ் ) - 500 கிராம் 
  • செரி - 250 கிராம் 
  • கண்டீற்பீல் - 250 கிராம்

பகுதி - III 

  • ஸ்ரோபெரி ஜாம் - 1 போத்தல் 
  • கோல்டன் சிறப் - 1 போத்தல் 
  • சௌ சௌ - 1 போத்தல் 
  • இஞ்சிப்பாகு எசன்ஸ் - 1 போத்தல் 
  • வனிலா - 1 அவுன்ஸ் 
  • ஆல்மன்ட் எசன்ஸ் - 1 அவுன்ஸ் 
  • றோஸ் எசன்ஸ் - 1 அவுன்ஸ் 
  • தேன் - 1 வைன் கிளாஸ் 
  • பிறண்டி - 1 வான் கிளாஸ் 
  • கறுவாத் தூள் - 1 மே.க (நிரப்பி)
  • சாதிக்காய் தூள் - 1 தே.க(நிரப்பி)

செய்முறை 

  1. முதலில் பகுதி II இல் குறிப்பிட்டுள்ள பழவகைகள் யாவற்றையும் உலர வைத்தெடுத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்க.

  2. சௌ சௌவைக் கழுவாமல் சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்க.

  3. பின்பு இவ் வெட்டிய பழவகைகள், சௌ சௌ யாவற்றையும் பெரிய ஜாடியில் போட்டு பகுதி III இல் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் யாவற்றையும் அதனுள் இட்டு  நன்கு கலந்து ஜாடியை இறுக மூடி ஒரு வாரம் வரை வைத்துக் கொள்க.

  4. பின்பு ரவையைத் துப்பரவாக்கி அரித்து இலேசாக வறுத்தெடுத்துக் கொள்க.

  5. மாஜரினை பாத்திரத்திலிட்டு நன்றாக அடித்துக் கொண்ட பின்பு அதனுள் ரவையைச் சிறிது சிறிதாகத் தூவி முழுவதுமாகச் சேர்த்துக் கொள்க.

  6. பின்பு முட்டையின் வெண்கருக்களை வேறாகவும், மஞ்சட் கருக்களை வேறாகவும் பாத்திரங்களில் எடுத்துக் கொள்க.

  7.  மஞ்சட் கருவினுள் சீனியை சேர்த்து சீனி கரையும் வரை நன்றாக அடித்துக் கொண்டபின் இக்கலவையை ரவை சேர்த்து அடித்து வைத்துள்ள மாஜரின் கலவையினுள் ஊற்றி முழுவதுமாகச் சேர்த்துக் கொண்ட பின்பு இதனுள் வெட்டி வைத்துள்ள பழக்கலவையையிட்டு சேர்த்துக் கொள்க.

  8. அடித்த கலவையினுள் நன்றாக நுரை பொங்கும் வண்ணம் அடித்த முட்டை வெண்கரு நுரையைச் சிறிது சிறிதாகச் சேர்த்து அடித்துக் கொண்ட பின்பு, இக்கலவையை மூன்று படைகள் பேப்பர் பரவிய கேக் தட்டினில் ஊற்றிப் பரவி பேக் செய்து கொள்க.

ரிச் கேக்கின் மேற்பரப்பிற்கு ஆல்மன்ட் ஐசிங் இட்டு அலங்கரித்தல்.

ஆல்மன்ட் ஐசிங் 

  • ஐசிங் சுகர் - 250 கிராம் 
  • கஜீ - 250 கிராம் 
  • முட்டை வெண்கரு - 1
  • வனிலா - 1 மே.க
  • ஆல்மன்ட் எசன்ஸ் - 1/2 தே. க 
  • றோஸ் எசன்ஸ் - 1 தே.க 
  •  தேசிப்புளி - அளவிற்கு

  1. கேக் நன்கு ஆறிய பின்பு எடுத்து அதன் மேற்பரப்பு முழுவதும் ஒரு மேசைக் கரண்டி மாஜரினைப் பரவலாக பூசிக் கொள்க.

  2. கஜீவை ஓரளவாக வறுத்து இடித்து மாவாக எடுத்து வைத்துக் கொள்க.

  3. பின்பு பாத்திரத்தில் முட்டை வெண்கருவை விட்டு நன்றாக நுரைபொங்க அடித்துப் பின்பு ஐசிங் சுகரை சிறிது சிறிதாகத் தூவி முழுவதுமாக சேர்த்துக் கொண்ட பின்பு அதனுள் மாவாக்கி வைத்துள்ள கஜீவையுமிட்டு தேசிப்புளி சேர்த்து கையிலொட்டாத பதத்திற்குக் குழைத்துக் கொள்க.(கையில் ஒட்டிக் கொள்ளுமாயின் ஐசிங்சுகரை மேலும் சேர்த்துக் கொள்க.)

  4. பின்பு இவ் ஐசிங் கலவையை ஓரளவாக எடுத்துக் கையில் வைத்து மெல்லியதாகத் தட்டிக் கேக்கின் மேற்பரப்பு முழுவதும் மறையும் வண்ணம் பரவலாக வைத்து நான்கு விரல்களாலும்  நன்றாக அமர்த்திக் கொண்ட பின்பு ஒரு கத்தியால் அழுத்தித்  தேய்த்து ஒப்பரவாக்கிக் கொண்டு, காயமுன்பாக 1 1/2'' X 1 1/2 '' அளவான துண்டுகளாக வெட்டியெடுத்து ஐசிங் ஓரளவாக உலர்ந்ததும் ரிச் கேக் சுற்றும் தாளில் சுற்றிய பின் பரிமாறலாம்.                                                                                                                                                                                                                                                          அல்லது                                                                                                                                                                                                                                                                                பலகையில் வைத்து 1/4'' தடிப்பாகவும் கேக் அளவு நீள அகலமுள்ள பாய் போன்ற துண்டாக உருட்டியெடுத்துக் கேக்கின் மேல் விரித்து மேலே கூறிய முறையில் துண்டுகளைத் தயார் செய்து கொள்ளலாம்.            



Post a Comment

0 Comments