Kottu Roti Recipe - கொத்து ரொட்டி

கொத்து ரோட்டி என்பது துண்டாக்கப்பட்ட ரொட்டியில் இருந்து தயாரிக்கப்படும் ஓர் சுவையான உணவாகும், இது இலங்கையில் மிகவும் பிரசித்தி பெட்ரா ஓர் உணவாகும். ரெசிபி தமிழில்!


6 பேருக்கு போதுமான சுவையான கொத்து ரொட்டி 

தேவையான பொருட்கள் 

  • கோதுமை மாவு - 500கிராம் 
  • உப்பு - அளவிற்கு
  • அப்பச் சோடா - 1/2 தே.க
  • தண்ணீர் - அளவிற்கு 
  • தேங்காயெண்ணை - 1தம்ளர் / 1/4 போத்தல் 

முட்டைக் கொத்திற்கு தேவையான பொருட்கள் 

  • முட்டை - 6
  • சிறிதாக வெட்டிய வெங்காயம்  - 5மே.க (நிரப்பி)
  • சிறிதாக வெட்டிய பச்சைமிளகாய் - 4மே.க(நிரப்பி)
  • உப்பு தூள் - அளவிற்கு 
  • மிளகுத்தூள் - அளவிற்கு
  • பெருஞ்சீரகம் - 1/2 தே.க 

ரொட்டி தயாரிக்கும் செய்முறை 

  1. கோதுமை மாவையும் அப்பச் சோடாவையும் கலந்தரித்துப் பாத்திரத்திலிட்டு, உப்பும் அளவிற்குத் தண்ணீரும், 2மே.க தேங்காயெண்ணையும் விட்டுக் கையிலொட்டாத பதத்திற்கு நன்றாக அடித்துக் குழைத்து மெதுமையாக பந்து போலாக்கிப் பாத்திரத்தில் வைத்து இரண்டு மேசைக்கரண்டி தேங்காயெண்ணையை மாப்பசைக் கலவையின்மேல் ஊற்றி நன்றாக அதன் மேற்பரப்பு முழுவதும் புரட்டிக் கொண்ட பின்பு ஈரமான துணியால் மூடி ஒரு மணி நேரம் வரை வைத்துக் கொள்க.

  2. பின்பு மாப்பசைக் கலவையை யெடுத்து மீண்டும் மெதுமையாகும்வரை நன்றாக அடித்து 24 சம அளவான உருண்டைகளாகப் பிரித்து இரண்டு உள்ளங்கைகளுக்கு இடையே வைத்து அழுத்தமாக உருட்டி ஒவ்வொரு உருண்டைகளாகத் தேங்காயெண்ணையில் தோய்த்தெடுத்துப் பாத்திரத்திலடுக்கி மீண்டும் மூன்று மணி நேரம் வரை வைத்துக் கொள்க.

  3. பின்பு மாஉருண்டைகளை ஒவ்வென்றாக எடுத்து எண்ணெய் பூசிய பெரிய தட்டில் வைத்து விரல்களால் மெதுவாக விரித்துத் தட்டி கொண்ட பின்பு அவ்விரித்த மாப்பசையைத் தட்டில் திருப்பித் திருப்பி விசிறிய விசிறிப் போட்டு ரிசூ போல் மெல்லியதாக வரும்வண்ணம் வீசிக் கொண்ட பின்பு அதை முதலில் இரண்டாக மடித்து, மீண்டும் மறுபடி மடித்து வைத்துக் கொள்க.(விசிறிப் போட்டு விரிக்கச் சிரமமாக இருப்பின், ஓர் எண்ணெய் பூசிய பலகையில் வைத்து, உருளையால் ரிசூ போல் மிக மெல்லியதாக வரும்வண்ணம் விரித்து உருட்டிக் கொண்ட பின்பு மேற்கூறிய முறையில் மடித்துக் கொள்ளலாம்.

  4. பின்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்துச் சூடானதும் ஒரு தேக்கரண்டி எண்ணையைப் பரவலாக ஊற்றித் தோசைக்கல் முழுவதும் புரட்டிக் கொண்டபின்பு இரண்டிரண்டு ரொட்டியாக ஒவ்வொரு முறையும் வைத்து இரு புறமும் திருப்பிப்போட்டு வாட்டி எடுத்துக் கொள்க.(இவ்வண்ணமே ஒவ்வொரு முறையும் ரொட்டி வாட்டும் போதும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வாட்டுதல் வேண்டும்.)

  5. பின்பு வாட்டியெடுத்த ரொட்டிகளைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டி தனித்தனியாக ஆறு பகுதியாகப் பிரித்து வைத்துக் கொள்க.

  6. பின்பு முட்டைகளை உடைத்துப் பாத்திரத்தில் விட்டு, வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்புத்தூள் , மிளகுத்தூள் பெருஞ்சீரகப்பொடி, என்பவற்றையிட்டுக் கலந்து, நன்றாக அடித்து வைத்துக் கொள்க.

  7. பின்பு தோசைக் கல்லை அடுப்பில் வைத்துச் சூடானதும் 1தே.க எண்ணெய் விட்டுக் காயவைத்து காய்ந்த பின்பு அடித்த முட்டைக் கலவையில் 3 அல்லது 4 மேசைக்கரண்டியளவு முட்டைக் கலவையை விட்டுக் கரண்டியால் மெதுவாகப் பரவிக் கொண்ட பின்பு  சிறிதாக வெட்டிய ரொட்டியின் ஒரு பகுதியை அம்முட்டையின் மேலிட்டு கூரான விளிம்புகளையுடைய இரண்டு தட்டுகளால்(அல்லது கூரான நீண்ட விளிம்புடைய இரண்டு கத்தியால்) நன்றாகச் சேர்த்துக் கொத்தி முட்டை ரொட்டியோடு நன்றாகச் சேர்ந்து அவிந்து ரொட்டி உதிரும் பதமடைந்ததும் அள்ளியெடுத்துக் கொள்க. இவ் வண்ணமே மற்றைய பிரிவு ரொட்டிகளையும் தயாரித்துக் கொள்க.

  8. இறைசிக் கொத்து தயாரிப்பதாயின் மேற்கூறிய முறையில் முட்டைக் கொத்து ரொட்டியைத் தயாரித்து, இறைச்சி மசாலாக்கறி  2 கரண்டியளவு கலந்து கொத்தியெடுத்துக் கொள்ளலாம்.      

         குறிப்பு 

          **250கிராம் இறைச்சியில், இறைச்சிமசாலாக்கறி தயாரிக்குக. (கறி தயாரிக்கும் பகுதியைப் பார்க்குக. 

Post a Comment

0 Comments