Egg Dosa - முட்டை தோசை

 

காலை உணவிற்கு ஏற்ற புரதம் நிறைந்த முட்டை தோசை ரெசிபி தமிழில். முட்டை மற்றும் தோசை மாவுடன் தயாரிக்கப்படும் இந்த தோசை செய்முறை பாரம்பரிய தோசையில் இருந்து மாறுபட்ட ஓர் சுவையான ரெசிபியாகும்.

30 தோசைகள் 

தேவையான பொருட்கள் 

  • உடைந்த உழுந்து - 1 சுண்டு / 250கிராம் 
  • பச்சை அரிசி - 2 சுண்டு 
  • வெந்தயம் - 1 தே. (நிரப்பி)
  • மஞ்சள்தூள் - 2 சிட்டிகை 
  • உப்புத்தூள் - அளவிற்கு
  • மிளகுதூள் - அளவிற்கு
  • முட்டை - 8 - 10
  • நல்லெண்ணெய் / நெய் - 1/4 போத்தல் /1 தம்ளர் 
  • அப்பச்சோடா - 1 சிட்டிகை                                                                                    தாளிதம் 
  • சிறிதாக வெட்டிய வெங்காயம் - 2 மே.க (நிரப்பி)
  • சிறிதாக வெட்டிய கறிவேப்பிலை - 1 தே . க (நிரப்பி)
  • பெருங்சீரகம் - 1 சிட்டிகை 
  • கடுகு - 1 சிட்டிகை 
  • தேங்காயெண்ணை - 2 மே .க 

செய்முறை 

  1. உழுந்தைத் துப்பரவாக்கி மூன்று மணிநேரம் ஊறவைத்து, தோல் நீக்கிக் கழுவிக் களைந்து தேவைக்களவாக நீர் சேர்த்துப் பசுந்தையாக அரைத்து வைத்துக் கொள்க.
  2. அரிசியைத்  துப்பரவாக்கிக்  கழுவி மூன்று மணி நேரம் வரை ஊறவைத்து இடித்து அரிக்குக. அரைக்கும்போது வரும் குறுணலைச் சுளகிலிட்டுக் கொளித்து 1/2 சுண்டு நடுத்தர அளவுடைய குறுணலை எடுத்து வைத்த பின்பு, மிகுதிக் குறுணலை இடித்து மாவை அரித்து எடுத்துக் கொள்க.
  3. பின்பு இரண்டு தம்ளர் தண்ணீரைக் கொதிக்கவைத்துத் தண்ணீர் நன்கு பொங்கிக்  கொதித்ததும் 1/2 சுண்டு குறுணலையிட்டு நன்கு துழாவிச் சேர்த்துக்கொண்ட பின்பு உடனேயே அடுப்பிலிருந்து இறக்கி 1/2 தம்ளர் குளிர்ந்த நீர் விட்டு நன்கு கலக்கிக் கலவையை அறவைத்துக்கொள்க.
  4. அரைத்து வைத்துள்ள உழுந்தினில் ,ஆறிய குறுணல்  கஞ்சியை ஊற்றி நன்கு சேர்த்துக் கொண்ட பின்பு, மாவையுமிட்டு சேர்த்துக் கரைக்குக. நீர்த்தன்மை காணாவிடின் தேவையான அளவு தண்ணீரை விட்டுக் கூழ்ப்பதமாகக் கரைத்து 10 -12 மணி நேரம் வரை புளிக்கவைத்துக் கொள்க.
  5. தாச்சியில் எண்ணெய்க் காயவைத்துக் கடுகைப்போட்டு வெடிக்கவைத்த பின்னர் அதனுள் வெங்காயம், கறிவேப்பிலை, பெருஞ்சீரகம் என்பன இட்டுத் தாளித்து இறக்கிப் புளிக்க வைத்துள்ள தோசைமாக் கலவையில் ஊற்றி 1 சிட்டிகை அப்பச்சோடாவும் உப்புநீரும் அளவிற்கு விட்டு நன்றாக அடித்துக் கரைத்துக் கொள்க.
  6. முட்டைகளை உடைத்துப் பாத்திரத்தில் விட்டு அளவிற்கு உப்புத்தூள், மிளகுத்தூள் என்பன சேர்த்து அடித்து வைத்துக் கொள்க. 
  7. பின்பு தோசைக் கல்லில் சிறிதளவு நெய்யூற்றிப் பரவலாகப் புரட்டிக் கொண்டபின்பு கரைத்து வைத்துள்ள தோசைமாக்கலவையை மெல்லிய தோசைகளாக வார்த்து, அதன்மேல் பரவலாக 1 மே.க நெய்யை ஊற்றி சிறிதுநேரம் வேகவிட்டபின்பு, அதன்மேல் அடித்த முட்டையில் 2 மே . கரண்டியைப் பரவலாக ஊற்றித் தோசையைப் பாதியாக மடித்து இருபுறமும் மாறி மாறித் திருப்பிப் போட்டுப் பொன்னிறமாக வேகவிட்டெடுத்துப் பரிமாறலாம்.
  8. இவ்வண்ணமே தோசையைத் தயாரித்து உருளைக்கிழங்கு மசாலாக் கறியை வைத்து, மாசலத்தோசை தயாரிக்கலாம்.

குறிப்பு 

சாதாரண தோசையாயின் அரிசிமாவிற்குப் பதிலாக மூன்று சுண்டு அவித்த கோதுமை மாவை இட்டுக் குழைத்து கொள்ளலாம். ஆனால் கஞ்சி காய்ச்சத் தேவையில்லை.                

 

Post a Comment

0 Comments